பதிவு செய்த நாள்
31
அக்
2012
10:10
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை ஒட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 5 மணி முதல் 8 மணி வரை தொடர்ச்சியாக விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி, மிருத்ஸங்கிரஹரணம், அங்குராபணம், ரட்சாபந்தனம் ஆகியவை நடந்தது. இதனை தொடர்ந்து காலையில் பாகம்பிரியாள் அம்மனுக்கும், சங்கரராமேஸ்வரருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. கொடியேற்று விழாவை ஒட்டி சுவாமி, அம்மன் சன்னதி முழுக்க மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடிமரமும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் பிரகாரங்களில் உள்ள அனைத்து விக்ரங்களும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமி, அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க, ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்க சரியாக காலை 8.23க்கு கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், மண்டகப்படி தாரர் திருவனந்தல் மாரியப்பன், மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு பாகம்பிரியாள் அம்மன் பித்தளை வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 9ம் தேதி நடக்கிறது.