திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2024 11:03
திருப்புல்லாணி, திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண நகைகள் மாயமாகியுள்ளது. இது தொடர்பாக கோயில் ஸ்தானிகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார் உள்ளிட்ட மூலவருக்கும், உற்ஸவ மூர்த்திகளுக்கும் பாண்டிய மன்னர் மற்றும் சேதுபதி மன்னர் காலத்து பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, முத்து, பவளம் உள்ளிட்ட நகைகள் ஆபரணங்கள் உற்ஸவ காலங்களிலும் விசேஷ நாட்களிலும் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த நகையை அனைத்தும் திருப்புல்லாணி கோயிலில் உள்ள நகைகள் பாதுகாக்கும் பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள கருவூல பெட்டகத்திலும் வைத்து பாதுகாக்கப்படுகிறது. பெட்டகத்தின் சாவியை திருப்புல்லாணி கோயில் பரம்பரை கோவில் பூஜை முறை பார்க்கும் ஸ்தானிகர் வைத்திருப்பது வழக்கம். பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் உள்ள உற்ஸவர்களுக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறித்து கடந்த ஆண்டு நவ., மாதம் ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஸ்தானிகர் சீனிவாசனுக்கும் தபால் அனுப்பி உள்ளார். பிறகு ஸ்தானிகர் முன்னிலையில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்துள்ளது. அப்போது ஆவணத்தில் இருந்த தங்க நகைகள் பெட்டகத்தில் இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள கருவூல பெட்டகத்திலும் நகை சரிபார்ப்பு ஆய்வு நடத்தப்பட்டது. அங்கும் சில நகைகள் குறைந்துள்ளது. நகை மதிப்பீட்டாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்யும் போது 1400 கிராம் தங்க நகை, 2,249 கிராம் வெள்ளி பொருட்கள் மாயமானது தெரிய வந்தது. ரூ. ஒரு கோடி மதிப்பிலான நகை தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச் 6 அன்று திவான் பழனிவேல் பாண்டியன் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஸிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்புல்லாணி கோயில் நகைகள் மாயமானது குறித்து தனியாக சீனிவாசனிடம் விளக்கம் கேட்டு மெமோ அனுப்பப்பட்டுள்ளது. இதில் காணாமல் போன நகையினை பிப்.,29ஆம் தேதிக்குள் திரும்ப வந்து ஒப்படைப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதுவரை நகைகளை ஒப்படைப்பு செய்யாததால் மார்ச் 1ஆம் தேதி முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.