பதிவு செய்த நாள்
03
ஏப்
2024
12:04
ஆழ்வார்திருநகரி; தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயிலில் பங்குனி தேரோட்டம் பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதி கோயில்கள் ஏழாவதாகவும், சுக்கிர திசைக்கு அதிபதியாகவும் விளங்கும் மகரநெடுங்குழைக்காதர் கோயிலில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சுவாமி நிகரில் முகில் வண்ணன் தன் தேவியர்களுடன் பரங்கி நாற்காலி, ஆளும் பல்லக்கு, சிம்மவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனம், சேஷ வாகனம் யானைவாகனம், இந்திரவிமான வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. 9வது நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டியும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து காலை 7.00 மணிக்கு சுவாமி நிகரில்முகில்வண்ணன் திருத்தேருக்கு எழுந்தருளினார். சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த பெருமாளுக்கு மங்கல ஆரத்தி நடைபெற்றதும் தேரோட்டம் நடைபெற்றது. ரதவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா கோபாலா என விண்ணதிர உற்சாக முழக்கமிட்டு ஆரவாரத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். பக்தர்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரதவீதிகளில் வலம் வந்த தேர் இடையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் மாலையில் தேர் இழுக்கப்பட்டு மாலை 6.45 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு தாமிரபரணி நதியின் கூடுபுனல் துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. அன்று இரவில் சுவாமி வெட்டிவேர் தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.