திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2024 11:04
திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாகடந்த 25ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினசரி நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் 5ம் நாளன்று (30ம் தேதி) நடந்தது. தேரோட்டம் இதனை தொடர்ந்து 10ம் நாளானநேற்று தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலையில் அழகிய நம்பிராயருக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து அதிகாலை 05:00 மணிக்கு நம்பிசுவாமிகள் தேவியர்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அதன்பின் காலை 09:30 மணிக்கு ராமானுஜ ஜீயர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க கொளுத்தும் வெயிலில் உற்சாகத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரதவீதிகளை சுற்றி வந்து மதியம் 12:25 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் அன்னதானம் வழங்கப்பட்டது.