பதிவு செய்த நாள்
05
ஏப்
2024
10:04
பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏப்.,12 அன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில், ஏப்., 21ல் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 11 இரவு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. ஏப்., 12 காலை கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்படும். தொடர்ந்து தினமும் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வர உள்ளனர். மேலும் ஏப்., 18 காலை நடராஜர் வீதி வலம் வருகிறார். மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருள உள்ளார். ஏப்., 20 காலை விசாலாட்சி அம்பிகையுடன் சந்திரசேகர சுவாமி திருவீதி வலமும், இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21 மாலை 5:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் உலா வந்து மீனாட்சி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. ஏப்., 22 ரத வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் கொடி இறக்கமும், ஏப்., 24 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஷ்டிகள் மற்றும் ஆயிர வைசிய சபையினர் செய்கின்றனர்.