பதிவு செய்த நாள்
06
ஏப்
2024
04:04
பல்லடம்; பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், 53வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
பல்லடத்தை அடுத்த பருவாய் கிராமத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை காவடி குழுவினர், கடந்த, 1971ம் ஆண்டு முதல், வெள்ளியங்கிரி மலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக சென்று சிவபெருமானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று 53 வது ஆண்டாக பாதயாத்திரை புறப்பட்டனர். பருவாயில் இருந்து பாதயாத்திரையாகவே வெள்ளியங்கிரி மலை சென்று, அதன் பிறகு, மீண்டும் பாதயாத்திரையாகவே ஊருக்கு திரும்புவார்கள் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை நிகழ்வில், 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக, குருசாமி ஈஸ்வரன் தலைமையில் பருவாய் மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து, கும்மியாட்டம், காவடி ஆட்டம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, விநாயகர் கோவில் முன் காவடியை வைத்து பூஜை நடந்தது. மத்தளம் அடித்தபடி வந்த பக்தர்கள், ஊர்வலமாக வந்து விநாயகருக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்றனர். கிராம மக்கள் அனைவரும் குடும்பத்தோடு இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பாதயாத்திரை பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.