மங்கலதேவி கண்ணகி கோயில் ஏப்.23ல் சித்ரா பவுர்ணமி விழா; முன்னேற்பாடுகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 11:04
கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயில் விழா ஏப்.23ல் நடைபெறுவதை முன்னிட்டு இடுக்கி சப் கலெக்டர் அருண் தலைமையிலான குழு முன்னேற்பாடுகள் குறித்து கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டது.
தமிழக கேரள எல்லை கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கிடையே பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. இருந்த போதிலும் கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப் பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பு தேனி, இடுக்கி கலெக்டர் தலைமையிலான கூட்டுக் குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி விழா நடத்தப்படும். இந்நிலையில் ஏப். 13ல் தேனி இடுக்கி கலெக்டர் தலைமையிலான கூட்டுக் குழு கூட்டம் தேக்கடியில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இடுக்கி சப் கலெக்டர் அருண் தலைமையிலான குழுவினர் கண்ணகி கோயிலுக்கு சென்றனர். விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவைச் சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். நேற்று முன்தினம் உத்தமபாளையத்தில் ஆர்.டி.ஓ., தாட்சாயிணி தலைமையில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.