திருப்புத்தூர்; திருப்புத்தூர் கோட்டைக்கருப்பண்ணசுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த மண்டலாபிஷேக பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தது. நிருப்புத்தூரின் காவல்தெய்வமான கோட்டைக்கருப்பர் கிழக்கு திசையில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் விநாயகர், பாலமுருகன், கோட்டைக் கருப்பர், சங்கிலிக் கருப்பர், காளியம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதிகள், சேமக்குதிரைகளுக்கும் திருப்பணி நடந்து பிப்.21 ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலையில் தினசரி மண்டலாபிஷேகம் பூஜைகள் நடந்தது. நேற்று நிறைவு நாளை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் காலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. பின்னர் வேதபாராயணம் முடிந்து யாகசாலை பூரணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவாரதேவைகளுக்கு மகா அபிஷேகம் நடந்து மண்டலாபிஷேகம் பூர்த்தியடைந்தது. பின்னர் அலங்காரத்தில் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை திருப்பணிக்குழுவினர் செய்தனர்.