பதிவு செய்த நாள்
10
ஏப்
2024
02:04
குற்றாலம்; குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. குற்றாலம், குற்றாலநாதசுவாமி கோயிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 5.20 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினர். காலை 8.20 மணிக்கு விநாயகர், முருகர், சுவாமி, அம்பாள் ஆகிய 4தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பக்தி கோஷம் முழங்க தேரோட்டம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் தங்கம், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், பா.ஜ., நிர்வாகிகள் திருமுருகன், செந்துார்பாண்டி, இந்து முன்னணி இசக்கிமுத்து, திமுக., ராமையா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 11ம்தேதி காலை 9.30 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ம் தேதி காலை10 மணிக்கு சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனைநடக்கிறது. 14ம் தேதி காலை10.20 மணிக்கு மேல் சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.