பதிவு செய்த நாள்
10
ஏப்
2024
03:04
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில், யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உடுமலை திருப்பதி ரேணுகாதேவி அம்மன் கோவிலில், யுகாதி பண்டிகையையொட்டி சிறப்பு பூஜை கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலையில் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்துடன் அம்பாள் அருள்பாலித்தார். மாலையில், 5:00 மணி முதல், 7:00 மணிவரை புற்றுபூஜையும், இரவு, 10:00 மணிவரை கோவில் வளாகத்தில் பாலாற்று பூஜை மற்றும் சக்தி அழைத்தல் வழிபாடுகள் நடந்தது. நேற்று காலையில், உடுமலை திருப்பதி கோவில் பத்மாவதி தாயார் மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பு பூஜைகள் துவங்கியது. முதலாக உடுமலை திருப்பதி விநாயகர் கோவிலிலிருந்து, மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வகையான சீர்தட்டுகளுடன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், விநாயகர் பூஜை, சுத்தி புண்யாகம், யுகாதி அலங்கார பூஜைகள் ஆரம்பமாகின. சிறப்பு அலங்காரத்துடன் ஜமதக்னி மகரிஷி ரேணுகாதேவி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் உற்சவத்தை கண்டு வழிபட்டனர். திருமண வைபவத்தை தொடர்ந்து, கோ பூஜை, கோ தரிசனம், கண்ணாடி தரிசனம், கன்னிகா பூஜை மற்றும் தரிசனம், ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, பெரிய பூஜை நடந்தது. திருமண கோலத்தில் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, சுவாமிகளின் ஊஞ்சல் உற்சவம், ஆசீர்வாத நிகழ்ச்சிகளும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* உடுமலை ராமய்யர் திருமண மண்டபத்தில், கவர நாயுடு சமூக நல சங்கத்தின் சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் லோகநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் ஜெகநாதன் தலைமை வகித்தனர். முதல் நிகழ்வாக, காலையில் யுகாதி விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. மாணவர்களின் கல்வியை சிறப்பிக்க, ஹயக்கீரிவர் மந்திர உச்சாடனை, அர்ச்சனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு திருமண தடை உள்ளவர்களுக்கு, தடை நீக்குவதற்கான சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. சங்கத்தின் ஆண்டறிக்கை, பொருளாதார நிதிநிலை அறிக்கைகளை சங்க நிர்வாகத்தினர் வாசித்தனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, யுகாதியையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மதியம் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
* உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பலரும் யுகாதியை கொண்டாடும் வகையில் மாம்பழம், புளி, உப்பு, வெல்லம், வேம்பு இலைகள், மிளகாய் என ஐந்து வகை சுவைக்கான அனைத்தையும் கலவையாக்கி கோவில்களுக்கு சென்று வழிபட்டனர். பின்னர் அந்த கலவை உணவை அனைவரும் பகிர்ந்து உண்டு கொண்டாடினர்.