காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இரு ஆண்டுகளாக காசி விஸ்வநாதர் கோவில், அயோத்தியில் ராமர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு விஜய யாத்திரையாக சென்றிருந்தார். விஜய யாத்திரை நிறைவு பெற்று, கடந்த மாதம் 20ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடம் வந்தார். சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரையாக சென்ற இடங்களில் இருந்த மரப்பாச்சி பொம்மைகள், தேங்காய் கொப்பரை, சிறுதானியங்கள் மற்றும் உல்லன் நுாலில் பொம்மைகளாக வடிவமைக்கப்பட்டு அவை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் கண்காட்சியாக நேற்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், காஞ்சிபுரத்திற்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் பொம்மைகள், அயோத்தி செல்லும் ராமாயண விரைவு ரயில், சர்க்கரையால் செய்யப்பட்ட பொம்மைகள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட விநாயகர் பொம்மைகள் இடம் பெற்றிருந்தன. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கண்காட்சியை பார்வையிட்டு, வடிவமைத்த மகளிர் குழுவினரை பாராட்டினார். கண்காட்சிக்கான ஏற்பாட்டை பெங்களூரைச் சேர்ந்த காமாட்சி ஸ்ரீவித்யா சமிதியின் தலைவர் தனம் ரமேஷ், கலைப்பிரிவு தலைவர் சைலஜா ஜெயசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.