பதிவு செய்த நாள்
14
ஏப்
2024
05:04
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வரத்துவங்கினர். அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 12:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். அடிவாரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.