பதிவு செய்த நாள்
16
ஏப்
2024
07:04
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடினர்.
நம் நாட்டில் வசந்த காலத்தில் தொடக்கத்தை வரவேற்கும் வகையில், அந்தந்த மாநிலங்களில் புத்தாண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே வேளையில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, காஷ்மீர், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் இப்புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், ஈஷாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர். சூர்ய குண்டம் மண்டபம் முன்பு நடைபெற்ற ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் நாட்டுப்புற இசை, நடனம் மற்றும் களரி பயட்டு கலை நிகழ்ச்சிகள் தமிழ் கலாச்சாரம் உள்ளிட்ட தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. ஈசாவை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தேவி திருமேனியுடன் கூடிய ரதத்துடன் மலை வாசலில் இருந்து லிங்க பைரவி கோவில் வரை ஊர்வலமாக வந்தனர். அவர்கள் பல விதமான பழங்களை தேவிக்கு அர்ப்பணம் செய்து வழிபட்டனர். அதன்பின் லிங்க பைரவியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவில், ஆதியோகி திவ்ய தரிசன காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.