பதிவு செய்த நாள்
01
நவ
2012
10:11
பவானி: அகிலபாரத பாரதிய துறவியர் சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அன்னை காவிரி தீர்த்த யாத்திரை மற்றும் அன்னை காவிரி திருவிழா கடந்த, 20ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரியில் துவங்கியது.கடந்த, 28ம் தேதி ஒகேனக்கல்லில் உள்ள நாதீஸ்வரர் கோவிலில் முன்பாக உள்ள அண்ணாமலை சுவாமிகள் ஆஸ்ரம வளாகத்தில் யாத்திரை துவக்க விழா நடந்தது.அங்கிருந்து, நேற்று காலை பவானி சிவனடியார்கள் திருக்கூட்டத்தில் அன்னை காவிரி சிலைக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடும் நடந்தது. பின், கூடுதுறை முக்கூடல் சங்கமத்தில் காவிரி ஆற்றை வணங்கி பூஜை செய்தனர்.பெங்களூரு சுவாமி நகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், அகிலபாரத துறவியர் சங்க செயலாளர் மருதாசல அடிகளார், பேரூர் ஆதீனம் இளைய பட்டம் சிவஞானதேசிக சுவாமிகள், கோவை, கௌமார மடாலயம் குமரகுருபர அடிகளார், திருப்பாத சுவாமிகள் முத்துசிவராம அடிகளார், ஸ்ரீமத் சுவாமி கேசவானந்த மகராஜ், ஸ்ரீமத் சுவாமி ஈஸ்வரானந்த மகராஜ், சண்முகநாத சிவஞான தேசிகசுவாமிகள், கருணானந்த சுவாமிகள், ஸ்ரீமத் சுவாமி ஸர்வேஸ்வரானந்த மகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இவர்கள் கரூர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக, நவம்பர், 11ம் தேதி பூம்புகாரில் உள்ள காவிரி தாய்க்கு பூஜை செய்து யாத்திரையை முடித்துக் கொள்கின்றனர்.பவானி நிகழ்ச்சியில், திருஈங்கோய்மலை யோகினி நிர்மலாம்பா சரஸ்வதி எழுதிய, "பாரத புனித நதிகளின் வரலாறு என்ற நூல் வெளியிடப்பட்டது.யாத்திரை குறித்து காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் சுவாமி ராமானந்தா கூறியதாவது: மக்களுக்கு காவிரி நீர் பிடிப்பு பகுதியில் காடுகள் அழிக்கப்படுவதால் மழை நீர் குறைந்து வருகிறது. கிடைக்கின்ற நீரை மாசுபடுத்தாமல், வீணாக்காமல் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.காவிரியில் இருபுறமும் கான்கிரீட் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். இதற்கு, ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இதில் ஐந்து கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை உருவாக்கினால், நிலத்தடி நீர் உயரும். மழை அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.