பதிவு செய்த நாள்
16
ஏப்
2024
08:04
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 24ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவில் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை கருட சேவையும், 21ம் தேதி தேரோட்ட விழாவும், வரும் 22ம் தேதி காலை திருமஞ்சனமும், 23ம் தேதி காலை ஆள் மேல் பல்லக்கு உற்சவமும், தீர்த்த வாரியம் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருடசேவை உற்சவம்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசுமதி கனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ கல்யாண வீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி உற்சவம், புரட்டாசி மாத சனிக்கிழமை, தமிழ்ப் புத்தாண்டு ஆகிய நாட்களில், வெகுவிமரிசையாக கிராம மக்கள் சார்பில் விழா மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று முதல்முறையாக கோவில் ஏற்படுத்தி, 30 ஆண்டுகளுக்கு பின் கருட வாகன சேவை நடந்தது. இதில் கருட வாகனத்தில் உற்சவர் கல்யாண வீரராகவப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஈக்காடு கிராமத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை, 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் சித்திரை மாத பிரம்மோற்சவம் துவங்கியது. இரவு, 7:00 மணிக்கு கேடய வாகனத்தில் உற்சவர் முருகர் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலித்தார். பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனையுடன் தேர் வீதியில் உலா வந்தார். இரவு, 7:00 மணிக்கு, பூத வாகனத்தில் உற்சவர் உலா வந்தார். இன்று காலை சிம்மம், இரவு ஆட்டு கிடாய் வாகனம், நாளை காலை பல்லக்குசேவை, இரவு வெள்ளி நாக வாகனம் என, தினமும் இரு வேளை உற்சவர் முருகர் தேர்வீதியில் உலா வந்து அருள்பாலிக்கிறார். 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரும், 21ல் தெய்வானை திருக்கல்யாணம், 23ம் தேதி காலையில் தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம், இரவு கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் சேர்மன் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்மர் மலைக்கோவில். யோக நரசிம்மரின் உற்சவமூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் சோளிங்கரில் அமைந்துள்ளது. பக்தோசித பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. யோக நரசிம்மர் மலைக்கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஊர்க்கோவிலுக்கு எழுந்தருளிய பக்தோசித பெருமாள், இரவு 10:00 மணிக்கு சப்பரத்தில் வலம் வந்தார். lஆர்.கே.பேட்டை திருத்தணி சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் ராம நவமி உற்சவம் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி துவங்கிய உற்சவத்தில், தினசரி பாராயணம் நடந்து வருகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு சீதா, கோதண்டராமர் திருக்கல்யாணம் நடந்தது. நாளை 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு கருட சேவை நடக்கிறது.