பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
02:04
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி மாதத்தில் நடக்கக்கூடிய பங்குனி பிரமோற்ஸவமும், சித்திரை மாதத்தில் நிகழக்கூடிய சைத்ரோத்ஸவமும் பிரசித்தி பெற்ற தேரோட்டம் நடக்கக்கூடிய விழாவாகும். 500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தேர், வருடத்திற்கு இருமுறை நடக்கக்கூடிய உற்ஸவங்களில் பிரதான தேரோட்டம் நிகழ்வாக விளங்குகிறது. ஐந்து நிலை அடுக்குகளாக 30 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள பகுதி நிலைகளில் நான்கு திசைகளிலும் சுற்றி தசாவதார காட்சிகள், கிருஷ்ண லீலா மற்றும் பாகவத காட்சிகள் கலைநயமிக்க சிற்பங்களாக உள்ளது. தேவகணங்கள், ராட்சதகணங்கள், ரதி மன்மதன், விநாயகர், முருகன், தேரடி கருப்பண்ணசாமி, நாரதர், சப்தரிஷிகள், பிரிங்கி முனிவர், பதஞ்சலி முனிவர் உள்ளிட்ட காணக் கிடைக்காத முனிவர்களின் எழில் மிகு சிற்பக் காட்சிகள் எங்கும் பரவி கிடக்கின்றன. ராமாயண, மகாபாரத புராண இதிகாசங்களில் இருக்கக்கூடிய கதாபாத்திரங்களும் தேரில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்புல்லாணி கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் கூறியதாவது: பழமையும் புரதான சிறப்பு பெற்ற பெருமாள் கோயில் தேர் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு மர சக்கரங்கள் அகற்றப்பட்டு உயர் ரக இரும்பினால் ஆன தேர்ச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பங்குனி மற்றும் சித்திரை காலங்களில் நடக்கக்கூடிய தேரோட்ட விழா பிரசித்தி பெற்றதாகும். 30 அடி உயரம் கொண்டதில் 21 அடி மேற்கூரை சேர்த்து மொத்தம் 51 அடி உயரத்தில் உற்ஸவமூர்த்திகள் உடன் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வருகின்றது. தேரோட்டத்திற்கு வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் தேரை சுற்றி உள்ள சிற்பங்களை ஆர்வமுடன் கண்டு ரசித்து வணங்கி செல்கின்றனர் என்றனர்.