பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
10:04
கரூர் ; குளித்தலை அருகே அய்யர்மலையில் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. பச்சை, சிவப்பு உள்ளிட்ட எட்டு கற்களின் நடுவே ஒன்பதாவது ஆக ரத்தினம் கற்கள் உள்ள மலையில் சுயம்பு லிங்கமாக சுவாமி காட்சி அளிக்கிறார். அப்பர், திருவாசகர் ஆகியோரால் தேவாரம் பாடல் பாடப்பட்ட 274 சிவாலயங்களில் 64வது தேவார சிவஸ்தலம் ஆகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த அய்யர்மலை சிவஸ்தலம் ஆனது கடல் மட்டத்திலிருந்து 1171அடி உயரத்தில் 1071 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த அய்யர் மலையானது வாட்போக்கி மலை, காகம் பறவாமலை, ரத்தினகிரி மலை, ஐவர்மலை என்றும் சுவாமி மூலவர் வாட்போக்கி நாதர், முடித்தழும்பர், ராஜலிங்கர், மாணிக்க மலையான் என்றும் அழைக்கப்படுகிறார். மலை உச்சியில் அமையப்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உற்சவர் அம்மாளுடன் சிறப்பு அலங்காரத்தில் நந்தி, கைலாசம், ரிஷபம், காமதேனு, சிம்மம், சேஷம்,பல்லாக்கு உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா கண்டார். ஏப்ரல் 18ஆம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவமும், சித்திரை பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுவாமி ரத்தினகிரீஸ்வரர் உடனுறை சுரும்பார் குழலி அம்மனுக்கு பால், இளநீர், நெய், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. சுவாமி உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்ற நாமம் முழங்க, சிவ வாத்தியங்கள் இசைக்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழம் கிடைக்கும் அர்ச்சனை செய்த வழிபட்டனர். இன்று துவங்கிய தேரோட்டமானது அய்யர்மலை நான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையினை பல்வேறு கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வடம் பிடித்து இழுக்க மூன்று நாட்கள் சுற்றி வந்து வரும் ஏப்ரல் 24ம் தேதி மாலை நிலைக்கு வந்தடையும். மேலும் திருத்தேரினை முன்னிட்டு அய்யர் மலையை சுற்றி கோவில் குடி பாட்டு காரர்கள் மற்றும் பக்தர்கள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்,நிலக்கடலை, மிளகாய் உள்ளிட்ட தானியங்களை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். இக்கோவில் செயல் அலுவலர் அமர்நாதன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கரூர் முருக கணபதி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.