செஞ்சி; மேல்சித்தாமூர் பார்சுவநாதர் ஜெயின் கோவிலில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடந்த திருத்தேர் உற்சவத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஜெயினர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்சித்தாமூரில் தமிழக ஜெயினர்களின் தலைலம பீடமான ஜினகஞ்சி ஜெயின் மடமும், பழமைவாய்ந்த பார்சுவநாதர் கோவிலும் உள்ளது. பார்சுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் மகாவீரர் ஜெயந்தியன்று திருத்தேர் உற்சவம் நடத்து வருகின்றது. இந்த ஆண்டு திருத்தேர் உற்சவம் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துவன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பார்சுவ நாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலையில் சாமி வீதி உலா நடந்து வந்தது. நேற்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 பார்சுவநாதருக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. காலை 8.30 மணிக்கு பார்சுவநாதரை தேரில் ஏற்றி வடம் பிடித்தனர். ஜினகஞ்சி மடாதிபதி லட்சுமி சேன மகா சுவாமிகள், லட்சுமி சேன இளைய சுவாமிகள் வடம் பிடித்தலை துவக்கி வைத்தனர். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், தி.மு.க., ஒன்றிய செயலாளர் இளம்வழுதி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் இருந்து ஆயிரக்கணக்கான ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் வழங்கினர்.