பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
02:04
மானாமதுரை; மானாமதுரையில் ஆனந்தவல்லி,சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நாளை காலை 6:15 மணியிலிருந்து 7:31 மணிக்குள் நடைபெற உள்ளது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டத்திற்கு கோயிலின் முன்பாக இருந்த பெரிய தேருக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடனும், பின்னால் இருந்த சிறிய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரங்களுடன் எழுந்தருளினர். இந்தத் தேர்களுக்கு முன்னால் இருந்த சிறிய தேர்களில் விநாயகர் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் முருகனும் எழுந்தருளினர்.காலை 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க துவங்கினர்.தேர் 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து 10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேருக்கு முன்பாக ஏராளமான சிவனடியார்கள் கைலாய வாத்தியம் இசைத்த படியும், மானாமதுரை வீரவிதை சிலம்பாட்ட குழு தலைவர் பெருமாள் தலைமையிலான சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் ஆடியபடியும் சென்றனர்.தேரில் இருந்த சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் சோமசுந்தரம், ராஜேஷ், குமார், பரத்வாஜ் ஆகியோர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளையும் செய்தனர். அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேர் மீது பூக்கள் மற்றும் காய்கறிகள், பழங்களை தூவி சுவாமிகளை வழிபட்டனர். 4 ரத வீதிகளிலும் ஏராளமானவர்கள் பக்தர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் மோர், குளிர்பானங்கள்,தண்ணீர்ப்பந்தல் அமைத்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் சீனிவாசன்,மானாமதுரை நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி,துணைத்தலைவர் பாலசுந்தரம்,கமிஷனர் ரெங்கநாயகி, பொறியாளர் சீமா உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.