பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
04:04
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய தேர் கொண்டதும், காசியில் வாசி அவிநாசி எனப் போற்றுதலுக்குரியதும் மிகப் பழமை வாய்ந்ததுமான ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்தரை தேர் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை தேர்விலாவுக்கான கொடியேற்றம் கடந்த 14ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சாமி நான்கு ரத வீதிகளிலும் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேர் விழாவின் முக்கியமான பெரிய தேர் இழுக்கும் நிகழ்ச்சி முதலாம் நாள் விழா நேற்று துவங்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து அரோகரா நமச்சிவாயா கோஷத்துடன் வடம் பிடத்து இழுத்து மேற்கு ரத வீதியில் நிறுத்தினர். இன்று இரண்டாம் நாள் மீண்டும் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி, காலை 9:50 மணியளவில் துவங்கியது. இதில், வடக்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதிகளின் வழியாக கோவை மெயின் ரோட்டில் உள்ள தேர் நிலையில் மதியம் 1:44 மணியளவில் பெரிய தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். தேர் வரும் வீதிகளில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல், எலுமிச்சை ஜூஸ், சர்பத், அன்னதானம் ஆகியவை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டது. நாளை காலை ஸ்ரீகருணாம்பிகை அம்மன் தேர் வடம் பிடித்து நிலை சேர்த்துதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனுடன் ஸ்ரீ சுப்ரமணியர், ஶ்ரீ கரி வரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்படும். மாலையில் வண்டித்தாரை நிகழ்ச்சி நடைபெறும். வரும், 25ம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சி, 26ம் தேதி நடராஜ பெருமான் மஹா தரிசனத்தை தொடர்ந்து, மாலையில் கொடி இறக்கம், 27ம் தேதி மஞ்சள் நீர் விழா மற்றும் மயில் வாகன காட்சியுடன் சித்திரை தேர் விழா நிறைவு பெறுகின்றது.