பதிவு செய்த நாள்
22
ஏப்
2024
06:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை, வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் இருந்தது. இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் , ருத்ர பாகம் என மூன்று பாகங்களையும், பிற்கால சோழர்கள் காலப் பாணியில் ஆவுடையில் நான்கு வர்க்கம் வைத்தும், லிங்க பானத்தின் தலைப் பகுதி அரைக் கோள வடிவில் இருந்தது. லிங்க பானத்தின் தலைப்பகுதியான ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன் இருந்தது. இதனை கண்டறிந்த கோவையை சேர்ந்த அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள், அரசமரத்துக்குள் சிக்கியிருந்த சிவலிங்கத்தை மீட்டு, மேற்கூரை ஒன்றை அமைத்து வழிபாட்டிற்கு ஏற்ப பீடங்கள், புதிதாக நந்தியம் பெருமான் வழங்கி ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து அரன் பணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் கூறியதாவது: எங்கள் குழுவினர், தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், வெட்ட வெளியில் சிதைந்து கிடக்கும் சிவலிங்கங்களை மீட்டு, திருப்பணி செய்து வருகிறோம். கல்லுாரி மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், அருந்தவபுரம் கிராமத்தில் அரச மரத்தில் சிவலிங்கம் சிக்கியுள்ள தகவல் கிடைத்தது. ஊருக்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது, அப்பகுதியில் பெரிய சிவாலயமாக இருந்து சிதைந்து, சிவலிங்கம் மட்டும் அரச மரத்தின் அடியில் சிக்கி இருக்கலாம் என்பதை உறுதி செய்தோம். இந்த சிவலிங்கம் 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலம் என தெரியவந்துள்ளது. விரைவில் கோவில் கட்ட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.