தமிழகத்திலேயே 3வது பெரிய தேரான சாரங்கபாணி கோவிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 10:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக போற்றப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி கருடசேவை ஒலைசப்பரம் நடந்தது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில், நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க, சாரங்கா சாரங்கா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது. இந்தத் தேரின் நான்கு சக்கரங்கள் ஒன்பது அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள நான்கு குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்ததாக தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேராகும்.