குளிர்ந்தார் அழகர்; ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2024 01:04
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, இன்று காலை நடந்தது. இதற்காக கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன், கள்ளழகர் திருக்கோலத்தில், தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து அழகர்கோயிலில் இருந்து அழகர் மதுரை புறப்பட்டார். நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனம் நடந்தது.
விண்ணை முட்டிய ‛கோவிந்தா கோஷம்: இன்று (மே23) அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். பின் ஒவ்வொரு மண்டகப்படியாக வந்தார். காலை 6.00 மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.
பச்சைப்பட்டு: அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம். ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீச்சி அடித்து பரவசம் அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி கள்ளழகரை வரவேற்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ராமராயர் மண்டபம்; அழகர்கோவில் தொடங்கி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவில் வரை சற்றேறக்குறைய 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர், வைகையாற்றிலிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு பிற்பகல் 12 மணியளவில் பக்தர்களால் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.