பதிவு செய்த நாள்
24
ஏப்
2024
02:04
போத்தனூர்; கருப்பராயன், கன்னிமார், பத்ரகாளியம்மன், கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு சக்தி கரக ஊர்வலம் நடந்தது.
சுந்தராபுரம் அருகே பதிவாளர் காலனியிலுள்ள இக்கோவிலின், 13ம் ஆண்டு திருவிழா கடந்த, 16ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு அம்மன் சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நடந்தன. இரண்டாம் நாள் முதல் நேற்று தினமும் அபிஷேக பூஜை, பூவோடு எடுத்தல், சிறப்பு பூஜை நடந்தன. இன்று காலை குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பின் தொடர, சக்தி கரகம், பக்தர்கள் தீர்த்த குடம், பூச்சட்டியுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மதியம் அபிஷேக பூஜை, அன்னதானமும், மாலை மாவிளக்கு வழிபாடும் இதையடுத்து பத்ரகாளியம்மன் திருவீதி உலா மற்றும் முளைப்பாரி எடுத்தல் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, 8:00 மணிக்கு அபிஷேக பூஜை துவங்குகிறது. 11:00 மணிக்கு சிறப்பு பூஜை, 12:00 மணிக்கு முனியப்பன் கோவிலில் இருந்து கருப்பராயன் சாமி அழைத்து வருதல், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 6:00 மணிக்கு கருப்பராயன். பத்ரகாளியம்மன் சாமிகள் கரகம் மற்றும் சப்பரத்துடன் திருவீதி உலா நடக்கிறது. நாளை இரவு, 8:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.