உத்தரகோசமங்கை பெருமாள் கோயிலில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2024 08:04
உத்தரகோசமங்கை: மதுரை சித்திரைத்திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோவிந்த பெருமாள் கோயிலில் நேர்த்திக்கடனாக பெறப்பட்ட உணவுப்பொருட்களை சமைத்து மண் வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உத்தரகோசமங்கை கண்மாயில் கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கும். விழா நாட்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடக்கும். இதையொட்டி கோயில் கோடாங்கி திருமால் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் நெல், மிளகாய், நவதானியம், காய்கறிகள், அரிசி பெறப்பட்டன. தற்போது கண்மாயில் தண்ணீர் உள்ளதால் கரையோரம் பெருமாளின் திருநாம பட்டைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று மதுரை சித்திரைத் திருவிழா நிறைவுற்று கள்ளழகர் அழகர்கோவில் திரும்புவதையொட்டி நேர்த்திக்கடனாக பெறப்பட்ட பொருட்களை கொண்டு அன்னதானம் தயார் செய்யப்பட்டது. கோடாங்கி தொட்டுக் கொடுத்த மண்வெட்டியால் குவித்து வைக்கப்பட்ட சாதத்தை கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் நேற்று மாலை 6:00 முதல் இரவு 11:00 மணி வரை வழங்கப்பட்டது.
கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: ஆறு தலைமுறைகளாக தலுகை எனப்படும் அன்னதான விழாவை நடத்தி வருகிறோம். சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்பர். விவசாயத்திற்கு முக்கிய தேவையாக விளங்குவது மண்வெட்டி. அதை நினைவுபடுத்தும் விதம் மண்வெட்டியால் சாதம் கிளறி வழங்கப்படுகிறது என்றனர். ஏற்பாடுகளை யாதவ சங்கத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.