துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் முதலாவது தலமாகவும், சூரியனுக்கு அதிபதியாகவும் விளங்கக் கூடியது ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில். இங்கு, சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு காலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு கள்ளபிரான் சுவாமி தாயார்களுடன் எழுந்தருளினார். பின், கொடிப்பட்டம் சுற்றி வர, தீபாராதனைக்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் மாலையில் சிம்ம வாகனம், அனுமார் வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடு நடக்கிறது. மே 2ல் சுவாமி கள்ளபிரான், காய்சினிவேந்தபெருமாள், எம்இடர்கடிவான், பொலிந்துநின்றபிரான் ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வார் மங்களா சாசனம் நடக்கிறது. இரவில் கருட வாகனத்தில் குடவரை பெருவாயில் எதிர்சேவையும்நடக்கிறது. மே 6ல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.