பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
01:04
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் அகூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில், ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான ராமநவமி விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மொத்தம், 12 நாள் திருவிழாவில், தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு நேரத்தில் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நண்பகல் 11:00 மணிக்கு உற்சவர்கள் ராமர், லட்சுமணன் மற்றும் சீதாதேவிக்கும் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் திருத்தணி, நத்தம், கோரமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.