துலுக்காணத்தம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 01:04
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் அமைந்துள்ளது, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி துலுக்காணத்தம்மன் கோவில். இங்கு, கடந்த 21ம் தேதி கற்பக விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் ஜாத்திரை திருவிழா துவங்கி நடந்து வந்தது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7:00 மணிக்கு, அடிதண்டம் போடுதல் விழாவும் 9:00 மணிக்கு உடம்பில் கொக்கியால் குத்தி ரதம் இழுத்து தங்கள் வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர். பின் 11:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், மதியம் 1:30 மணிக்கு அம்மன் தாய் வீடு படையலுக்கு குளக்கரைக்கு செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, மாலை தீச்சட்டி எடுத்தல், இரவு பக்கோர் குத்துதல், பின் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. ஜாத்திரை திருவிழாவில் வெங்கத்துார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.