பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
01:04
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரியில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, பழமையான சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி கிராம தேவதை சந்தியம்மன் உற்சவத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, கடந்த 14ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், தினமும் காலையில் சிறப்பு பூஜைகளும், இரவு சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சிகளும் நடந்தன. கடந்த 20ம் தேதி காலை 7:30 மணிக்கு மலர் அலங்காரத்தில் 62 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய சுவாமியை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது. கடந்த 24ம் தேதி வரை வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 25ம் தேதி முதல், விடையாற்றி விழா துவங்கி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, நேற்றுடன், சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.