பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
03:04
பொள்ளாச்சி;சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மிக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா, பொள்ளாச்சியில் நடந்தது. அதில், பங்கேற்ற பொன் மாணிக்க வேல், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38,688 கோவில்களில் நிர்வாகம் நடத்துவதாக கூறுகின்றனர். அதில், 34,119 கோவில்களில் ஒரு நாள் வருமானம், 13.69 பைசா முதல், 27 ரூபாய் வரை தான். இந்த கோவில்களுக்கும் வரி போடப்படுகிறது. கடந்த ஆட்சியில், 2017 - 18ம் ஆண்டு, 340 கோடி ரூபாய்; 2018 - 19ம் ஆண்டு, 380 கோடி ரூபாய் வரி போட்டுள்ளனர். தற்போது இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும், 2021ல், 427 கோடியே, 87 லட்சம் ரூபாய் வரி போட்டுள்ளனர். இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. இது மட்டுமல்லாமல், ஆடிட் வரி என அதற்கு ஒரு வரி வசூலிக்கின்றனர். பகைவர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் கூட இந்தளவு கோவில் மீது வரி போடவில்லை. தற்போது, 2,000 ரூபாய்க்கு ஓட்டு வாங்கும் ஜனநாயகத்தில், வரி போட்டது மட்டுமல்லாமல் மாதாமாதம் கையாடல் குறித்து கண்டறியப்படுகிறது. அரசை தேர்வு செய்து, கோவில்களை ஒப்படைக்கிறோம். ஆனால், கையாடல், நம்பிக்கை துரோகம் செய்வது ஏற்க முடியவில்லை. ஒரு டீ விலை 15 ரூபாய். ஆனால், கோவில் வருமானம் 14 ரூபாய் தான். ஒரு நாள் வருமானம் கூட குறைவாக வரக்கூடிய கோவில்களுக்கு வரி போடப்படுகிறது. இந்த கோவில்களுக்கு அதிக வருமானம் வரக்கூடிய கோவிலில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறுகின்றனர். இதை செய்ய இவர்கள் யார்? நிறைய பிரச்னைகள் உள்ளன; வழக்கு போட்டுக் கொண்டே இருப்போம். தமிழகத்தில் கோவில்கள் சம்பந்தமாக எழும் போது, பிரச்னைகளுக்கு அனைவரும் ஒன்றாக நின்று போராட வேண்டும். இதற்காக முயற்சி எடுத்து வருகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.