பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
05:04
செஞ்சி; செஞ்சி வழுக்காம்பாறை முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி வழுக்காம்பாறையில் உள்ள குடியிருப்பில் புதிதாக முத்துமாரியம்மன் கோவிலும், விநாயகர், முருகன், நவக்கிரக சந்நிதியும் கட்டியுள்ளனர். இதன் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 27 ம் தேதி புதிய விக்கிரகங்கள் கரிக்கோல ஊர்வலமும், அன்று இரவு 9 மணிக்கு முத்துமாரியம்மன், விநாயகர், முருகர், நவக்கிரகம் உள்ளிட்ட தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தன மருந்து சாற்றி, கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு யாகசாலை பிரவேசமும், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கலச ஸ்தாபிதம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் துவங்கின. இதில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையும், 108 திரவிய சிறப்பு ஹோம நடந்தது. 9.30 மணிக்கு நாடி சந்தானம், 9.45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 10.15 மணிக்கு செல்லபிராட்டி ஈஸ்வரன் குருகல் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு மூன்று நாட்கள் தொடர் அன்னதானம் நடந்தது. இதில் செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.