பதிவு செய்த நாள்
30
ஏப்
2024
07:04
விஜயபுரா, கர்நாடகாவில், சித்தலிங்க சுவாமிகள் திருவிழாவின்போது தேர் சக்கரத்தில் சிக்கி மூன்று பேர் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம், இண்டி தாலுகாவின் லச்சியானா கிராமத்தில் ஆண்டுதோறும் சித்தலிங்க சுவாமிகள் ரத உற்சவம் நடக்கும். நடப்பாண்டும் விழா நடந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ரத உற்சவம் நடந்தது. இந்த விழாவை காண சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், தேர் சக்கரத்துக்குள் ஏழு பேர் விழுந்தனர். இதில், முஜகொண்டா, 17, சோபு ஷிண்டே, 51, ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஐந்து பேர், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தகவல் அறிந்த இண்டி கிராமப்புற போலீசார், அங்கு வந்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சுரேஷ் கடகதொண்டா, 36, என்பவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் லச்சியானா கிராமத்தை சேர்ந்தவர்கள்; படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. திருவிழாவின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தால், கிராமத்தினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.