பதிவு செய்த நாள்
03
நவ
2012
10:11
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு வருகின்ற நவ., 13ம் தேதி தீபாவளிப் பண்டிகையன்று துவங்கி சூரசம்ஹார விழா 18ம் தேதி நடக்கிறது. கந்த சஷ்டி விழா நாட்களில் திருக்கோயிலில் நடை திறக்கும் நேரம் குறித்து இணை ஆணையர் சுதர்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது கந்த சஷ்டி தொடங்கும் முதல்நாளான நவ.,13ம் தேதி மற்றும் 18ம் தேதியன்று சூரசம்ஹார விழா ஆகிய இரு தினங்களில் திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 6 மணிக்கு அருள்மிகு ஜெயந்திநாதர் யாகசாலையும் புறப்பாடு, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாரதனையும் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தன்று மாலை 4.20 மணியளவில் சுவாமி எழுந்தருளி மாலை 5.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழா 2ம் நாள் முதல் 5ம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. நவ., 19ம் தேதியன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருக்கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.35 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, திருக்கோயில் சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் வைத்து காலை, மாலை வேளைகளில் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.
தங்கவேல் காணிக்கை: திருச்செந்தூர் முருகனுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர், ஒரு கிலோ 92 கிராம் எடை கொண்ட தங்கவேலை, காணிக்கையாக வழங்கினார். வேளச்சேரியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், காணிக்கையாக தங்கவேலை, தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சனிடம் வழங்கினார்.