பதிவு செய்த நாள்
05
நவ
2012
11:11
வேலாயுதம்பாளையம்: காகிதபுரம் டி.என்.பி.எல். குடியிருப்பு வளாகத்தில் உள்ள வல்லப கணபதி கோவிலுக்கு கும்பாபிஷேகமும், புதிதாக கட்டுப்பட்டுள்ள லக்ஷ்மி நரசிம்மர் பெருமாள் கோவிலுக்கு மஹா சம்ரோக்ஷன பெருவிழாவும் நடந்தது. காகிதபுரம் டி.என்.பி.எல். குடியிருப்பு வளாகத்தில் வல்லப கணபதி கோவிலில் உள்ள வல்லப கணபதி, விஷ்ணுதுர்க்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன், நவக்கிரஹ சன்னதிகள் புனரமைக்கப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி புதிதாக கட்டப்பட்ட லக்ஷ்மி நரசிம்மர் கோவிலும், பரிவார தெய்வங்களான லக்ஷ்மி ஹயக்கிரீவர், தன்வந்திரி, லக்ஷ்மி வராகர் மற்றும் கருடாழ்வார் ஆகிய ஸ்வாமிகளுக்கு மஹா சம்ரோக்ஷனம் நடந்தது. சேலம் ஸர்வ ஸாதக சிவஸ்ரீ குமார சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் ஸ்ரீஸ்ரீகுருகுல வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை பாஞ்சராத்ர ஆகம வித்வான் முரளிதரபட்டாச்சார்யா, கோவை கருமத்தம்பட்டியைச் சார்ந்த சவுந்திரராஜ பட்டாச்சார்யா ஆகியோர் கும்பாபிஷேகம் மற்றும் மஹா சம்ரோக்ஷன விழாவை நடத்தினர். கோவில் நிர்மானம், திருப்பணியினை ஸ்ரீரங்கம் கோடிலிங்கம், ஆனந்த் ஆகியோரும், சிற்பங்களை திருமுருகபூண்டி, ஜெயமுருகன் சிற்பக்கூடத்தைச் சார்ந்த சிற்பி முருகனும் செய்திருந்தனர். முருகன் வள்ளி, தெய்வாணை திருக்கல்யாணம் மற்றும் ராமர் சீதை திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. பின், திருமுருகவள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி கலைமாமணி கிருபானந்தவாணி மங்கையர்க்கரசியின் சொற்பொழிவு நடந்தது. தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.என்.பி.எல். நிறுவன துணை மேலாண்மை இயக்குநர் வெள்ளியங்கிரி ஆகியோர்கள் பங்கேற்றனர். கோவில் கமிட்டி தலைவரும், டி.என்.பி.எல்., முதன்மை பொது மேலாளருமான மணி, செயலாளரும், மனித வளத்துறை துணைப் பொது மேலாளருமான பட்டாபிராமன், பொருளாளரும், கணக்குத்துறை துணைப்பொது மேலாளருமான ராஜகோபாலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில், பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள், டி.என்.பி.எல். பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த பணியாளர் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.