பதிவு செய்த நாள்
05
நவ
2012
11:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் வியாபாரம் செய்பவர்களில் பலர், ஒரு கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களின் பெயர் பட்டியலை, மக்களின் பார்வைக்காக வைத்த நிர்வாகம், 15 நாட்களுக்குள் செலுத்த கெடு விதித்தது.கோயில் வளாகத்தில் 110 பூக்கடைகள், வளையல் கடைகள் உள்ளன. எழுகடல் தெருவில், 156 கடைகளும், பிற பகுதிகளில் 120 கடைகள் மற்றும் புதுமண்டப கடைகள் என 720 கடைகள் உள்ளன. பல தலைமுறைகளாக இக்கடைகளில் வியாபாரம் செய்பவர்களிடம் குறைந்தபட்ச வாடகை வசூலிக்கப்படுகிறது. 2001 நவ.,1ல், அந்தந்த பகுதி சந்தை மதிப்பிற்கேற்ப வாடகை உயர்த்தப்பட்டது. 2004 முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை, பெரும்பாலான கடைகாரர்கள் ஏற்றுக்கொண்டனர். வெளி பகுதியில் உள்ள சில கடைக்காரர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை தராமல் காலம்தாழ்த்தினர். நோட்டீஸ் கொடுத்தும் பலனில்லை.வாடகை பாக்கியை செலுத்தாமலும், கடைகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் எழுந்தது. நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆய்வு செய்ததில், ஒரு கோடி ரூபாய் வரை பாக்கி இருப்பது தெரிந்தது. இதைதொடர்ந்து, அதிகபட்சம் பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை கோயில் வாசலில், பார்வைக்காக வைத்துள்ளனர். "15 நாட்களுக்குள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்; இல்லாதபட்சத்தில், கடையை ஆக்கிரமித்துள்ளதாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.