பதிவு செய்த நாள்
13
மே
2024
10:05
பந்தலூர்; பந்தலூர் அருகே உப்பட்டி காட்டிக்குன்னு பகுதியில், கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. கோவில் வருடாந்திர திருவிழா கடந்த பத்தாம் தேதி காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றம், காப்பு கட்டுகளுடன் துவங்கியது. திருநங்கை கார்த்திகா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிதர்காடு வனத்துறை வனக்காவலர் பிரபு மற்றும் பிந்து ஆகியோர் கொடியேற்றினார்கள். மறுநாள் காலை நாக கன்னி பூஜை மற்றும் முனி, காளி தெய்வங்களுக்கு பலி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலை ஐயன் கூத்தாண்டவரின் கண் திறப்பு பூஜையும், தொடர்ந்து வழி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருநங்கைகள் சங்கத் தலைவி நிஷா மற்றும் கார்த்திகா முன்னிலையில் கோவில் பூசாரி ஆசை தலைமையில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் வைபவம் நடந்தது. அதனை அடுத்து திருநங்கைகள் கும்மி ஆட்டம் மற்றும் தேங்காய் உடைத்தல், சூடம் எரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. உப்பட்டி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து அன்னதானம் வழங்கினார்கள். அதனையடுத்து சிறப்பு பூஜைகளும், திருநங்கைகளின் நடன நிகழ்ச்சி மற்றும் தாலி அறுப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள், தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து வந்து தாலி அறுத்து வளையல் உடைத்து மீண்டும் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர். பின்னர் தாலி அறுத்துக் கொண்ட திருநங்கைகளுக்கு ஆறுதல் கூறிய சக திருநங்கைகள் கூத்தாண்டவர்க்கு பூஜை செய்து வழிபட்டனர். களபலி பூஜையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. திருவிழா மற்றும் பூஜைகளில் பந்தலூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அருள்பெற்று சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் கூத்தையன், செல்வரத்தினம், வேரான், கண்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் திருநங்கைகள் செய்திருந்தனர்.