பதிவு செய்த நாள்
13
மே
2024
10:05
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக,10 நாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு,10 நாள் பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு மூஷிக வாகன புறப்பாடு நடைபெற்றது. பிரம்மேற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் துவஜா ரோஹணம் எனும் கொடியேற்ற வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வரும் 21ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணிக்கு மங்களகிரி விமான புறப்பாடு நடக்கிறது. இன்று இரவு மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. விழாவின் இரண்டாம் நாள் காலை சூரிய பிரபை புறப்பாடு, இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது. வரும், 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. 16ம் தேதி நாக வாகனத்திலும் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 17ம் தேதி இரவு 7:00 மணிக்கும், 18ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் பிரதான நாளான, 19ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணி முதல் 8:00 மணிக்குள் தேர் பக்தர்களால் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. 20ம் தேதி இரவு குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. வரும், 21ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வைகாசி விசாகமான, 22ம் தேதி காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதிஉலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில்வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. பின், சுப்பிரமணியவர் வீதி உலாவினை அடுத்து துவஜ அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. வரும், 23ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், 24ம் தேதி முதல் ஜூன், 2ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.