பதிவு செய்த நாள்
14
மே
2024
02:05
திருப்புவனம்; திருப்பாச்சேத்தி நேர்த்தி கடன் அருவாக்கள் கொல்கத்தா பக்தர்கள் விரும்பி வாங்குகின்றனர். விவசாயிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவை திருப்பாச்சேத்தி அருவாக்கள், பாதுகாப்பிற்கும் விவசாய தேவைகளுக்கும் தமிழகம் முழுவதும் விற்பனையாகின. விவசாயத்தில் இயந்திரங்கள் வருகைக்கு பின் அருவா, மண்வெட்டி, களை வெட்டி உள்ளிட்டவைகளின் தேவை வெகுவாக குறைந்து விட்டநிலையில் தொழிலாளர்களுக்கு நேர்த்தி கடன் அருவாக்கள் கை கொடுத்து வருகின்றன. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அருவா பட்டறைகள் உள்ளன. மதுரை பழைய இரும்பு மார்கெட்டியில் இருந்து கனரக வாகனங்களின் சேதமடைந்த இரும்பு பட்டைகளை கிலோ கணக்கில் வாங்கி வந்து அருவா தயாரிக்கின்றனர். ஒரு அடி முதல் 51 அடி வரை அருவா தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்கின்றனர். அருவாக்கள் 500 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை எடை , உயரம், வேலைப்பாடுகளுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. திருப்பாச்சேத்தி அருவா குறித்து யூ டியூப்களில் அதிகளவு விடியோக்கள் வெளியானதை அடுத்து கொல்கத்தாவில் இருந்து பக்தர்கள் அதிகளவு நேர்த்தி கடன் அருவா தயாரிக்க ஆர்டர் கொடுத்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் கார்த்திக்லட்சுமணன் கூறுகையில் : தமிழகத்தில் சாதாரண அருவாக்களை விட சற்று கனமாக நேர்த்தி கடன் அருவா தயாரிப்போம், உயரம், எடை ஆகியவை பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும், கொல்கத்தா காளிக்கு காணிக்கையாக செய்யப்படும் அருவாக்கள் சற்று கேள்விகுறி போல அமையும், மேற்புறம் மட்டும் சற்று பட்டையாகவும் கனமாகவும் அமையும், அதனை கையில் தூக்கி தோளில் வைத்து கொண்டுதான் செல்ல முடியும், தமிழகத்தில் வேலைப்பாடு குறித்து யூ டியூப்களில் பார்த்து விட்டு வந்து வாங்கிச் செல்கின்றனர்,என்றார்.