பதிவு செய்த நாள்
15
மே
2024
02:05
திசையன்விளை; உவரி சுயம்புலிங்கசுவாமி கோயில் வைகாசி விசாகத்திருவிழா வரும் 21ம் தேதி துவங்குகிறது. தென் மாவட்டங்களில் உள்ளமிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று, திசையன்விளை அருகேயுள்ள, உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலாகும்.
மனிதன் கைபடசெய்யாது தானே சுயமாக தோன்றி மக்களுக்கு அருள்பாலிப்பதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், கடற்கரையில் அமைந்திருப்பதும், சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில் பக்தர்கள் கடலில் பிளாப்பெட்டியில் மணல் எடுத்து, தலையில் சுமந்து, கரையில் குவிக்கும் வித்யாசமான நேர்த்தி கடன் செலுத்துவதும், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுதும் மூலவர் மீது சூரிய கதிர்கள்விழும் அபூர்வ நிகழ்வு நடந்து வருவதும் உள்ளிட்ட பல்வேறு தனி சிறப்புகள் வாய்ந்தது இக்கோயிலாகும். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று வைகாசி விசாக திருவிழாவாகும். நடப்பாண்டு விசாகத்திருவிழா வரும் 21ம் தேதி துவங்கி 2 நாட்கள்நடக்கிறது. விழாவில் முதலாவது நாளான வரும் 21ம் தேதி அதிகாலை, மதியம், மாலை, இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள், மாலை 6 மணிக்கு அம்பைமணி முருகனின், மகான்கள் செய்த தவம் என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு இருளப்பபுரம், சிவஅருள்நெறி திருக்கூட்டத்தாரின் தேவார இன்னிசை நடக்கிறது. விழாவின் சிகர நாளான22ம் தேதி விசாக திருநாள் அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறப்பு, தொடர்ந்து 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட சிறப்பு பூஜையும், காலை 9 மணி முதல் திசையன்விளை எஸ்.ஆர்.டி. பாரதி ஸ்டீல் சார்பில், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் நடத்தும், திருவாசகம் முற்றோதுதல், காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு உச்சிக்கால சிறப்பு பூஜை, மாலை 5 மணிக்கு தென்தாமரைகுளம் மணிகண்டன் குழுவினர் நாதஸ்வரம், 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சாயரட்சை சிறப்பு பூஜை, வைகாசி விசாகத்தின் பெருமை என்ற தலைப்பில் அம்பைமணி முருகன் சமய சொற்பொழிவு, இரவு 8:30 மணிக்கு ராக்கால பூஜை, 9 மணிக்கு நெல்லை நிருத்தியாஞ்சலி குழுவினர் பரதநாட்டியம், நள்ளிரவு 12 மணிக்கு எஸ்.ஆர். சந்திரன் ஸ்டார் நைட் குழு பக்தி மெல்லிசை, 1 மணிக்கு சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளம் வானவேடிக்கை முழங்க வீதி உலாவந்து, மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரைஅறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். விழாவிற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.