தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 10:05
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு 10 நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழாவில் பட்டினப்பிரவேசம் எனப்படும் ஆதின கர்த்தரை பல்லக்கில் சுமந்து வீதி உலா வரும் முக்கிய நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கான கொடியேற்று விழா தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் கொடி மரத்துக்கு எழுந்தருளினர். அங்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் மற்றும் வேத பாடசாலை மாணவர்கள் மந்திரம் ஓத, ஓதுவார்கள் தேவாரம் பாட மங்கள வாத்தியம் முழங்க கோயில் கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி, பஞ்சமூர்த்திகள் திருத்தேர் உற்சவம், காவிரியில் தீர்த்தவாரி ஆகியவை 10 நாள் உற்சவத்தில் நடைபெறுகிறது. மேலும் ஆதீன மடத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் குருபூஜை பெருவிழா 10 நாள் உற்சவமாக நடைபெறுகிறது. விழா நிறைவாக 30ஆம் தேதி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் வீதி உலா வரும் பட்டினப்பிரவேசம் காட்சியும் நடைபெறுகிறது. கடந்த 2022ம் ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின் போது ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசு தடை செய்து தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பை அடுத்து மீண்டும் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.