பதிவு செய்த நாள்
20
மே
2024
03:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் சன்னிதி பின்பக்கம் உள்ள பிரகாரத்தில் தல விருட்சமான மாமரம் உள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருப்பதால், இதை சிவனது ‘திருமணகோலம்’ என, அழைக்கின்றனர். அம்பாள் தவம் செய்த போது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து மணம் முடித்தாராம். ஏக+ஆமரம் = ஏகா ம்பரம், ஒரே மாமரம் என்று பெயர். இதை வேதமாமரம் என்றும் அழைக்கின்றனர். நான்கு வேதங்களை, நான்கு கிளைகளாக கொண்ட தெய்வீக மாமரம். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நான்கு சுவைகளை கொண்ட கனிகளைத்தருகிறது.
பல்வேறு மகத்துவமும், சிறப்பும் நிறைந்த இம்மரம், 25 ஆண்டுகளுக்கு முன் வாடஆரம்பித்து, முழுதும் பட்டுபோய் இறக்கும் தருவாயில் இருந்தது. இதை தொடர்ந்து, 2004ல் வேளாண்துறை உற்பத்தி ஆணையராக இருந்த அரசு கூடுதல் தலைமை செயலர் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை செயலர் முனைவர் ரா.கண்ணன் அறிவுரைப்படி, இம்மரத்தினுடையதிசுக்களை வைத்து, மரபணுதாவர முறையில் புதிய கன்றுகளை உருவாக்கி திருக்கோவில் நந்தவனத்தில் நடப்பட்டது. மண் தர பரிசோதனை செய்து உரிய முறையில் பாதுகாத்து பழைய மரமும் மீட்டு உருவாக்கப்பட்டது. இப்பணி, அப்போதைய, காஞ்சிபுரம் மண் பரிசோதனை ஆய்வு கூடம், உதவி ஆராய்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் வாயிலாக செய்யப்பட்டது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இம்மரம், தற்போது
காய்க்க துவங்கியுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஒரே மரத்தில் நான்கு விதமான சுவைகளை அளிக்கும் மாமரத்தில் காய்த்துள்ள மாங்காயை வியப்புடன் பார்த்து, இறைவன் அருளால் ஒரு மாங்காய் கிடைக்குமா என, மாமரத்தின் கீழ் சிறிதுநேரம் காத்திருந்து
செல்கின்றனர்.