திருப்புல்லாணி பட்டாபிஷேக ராமர் தேரோட்டம்; ஹரே ராமா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 03:05
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா நடந்து வருகிறது. கடந்த மே 13ல் காப்பு கட்டுதல் மற்றும் கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை மற்றும் இரவில் உற்ஸவர் வீதி உலா புறப்பாடு நடந்தது. கடந்த மே 19ல் இரவு 7:00 மணிக்கு உற்ஸவர் பட்டாபிஷேக ராமருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இன்று தனி சன்னதியாக உள்ள பட்டாபிஷேக ராமர், சீதா பிராட்டியார், லட்சுமணர், அனுமன் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தன. காலையில் உற்ஸவமூர்த்திகள் புறப்பாட்டிற்கு பிறகு 51 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் பீடத்தில் உற்ஸவர்கள் வைக்கப்பட்டு தேரின் முன்பாக நேற்று காலை 10:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருப்புல்லாணியில் நான்கு ரத வீதிகளிலும் ஹரே ராமா ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1:00 மணிக்கு தேர் இருப்பு நிலைக்கு வந்தது. அப்பொழுது பக்தர்கள் கூட்டத்தின் மீது புளியம்பழம், மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்டவைகள் வீசப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். நசளை காலை சேதுக்கரை மன்னார் வளைகுடா கடலில் அனுமார் வாகனத்தில் பட்டாபிஷேக ராமரும், கருடன் வாகனத்தில் ஆதிஜெகநாத பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் உற்ஸவமூர்த்திகளாய் எழுந்தருளி கடற்கரையில் தீர்த்தவாரியில் கலந்து கொள்கின்றனர். சேதுக்கரையில் இருந்து மாலை புறப்பாடாகி இரவு சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.