பதிவு செய்த நாள்
29
மே
2024
11:05
திருப்பூர்;கம்பன் காவியத்தில், அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் தொண்டின் சிறப்பே என, சிறப்பு பட்டிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவில், நேற்று முன்தினம், திருப்பூர் கம்பன் கழகம் சார்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. கம்பன் காவியத்தில் அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் பக்தி பரவசமே! தொண்டின் சிறப்பே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கம்பன் கழக பொதுசெயலாளர் ராமகிருஷ்ணன் நடுவராக பங்கேற்றார். பக்தி பரவசமே என்ற அணியில், கோவை மகேஸ்வரி சற்குரு, கடலுார் வெற்றிச்செல்வி பேசினர். தொண்டின் சிறப்பே என்ற அணியில், கோவை உமாமகேஸ்வரி, ஆடிட்டர் தெய்வநாயகி பேசினர். அனுமன் பக்தியில் சிறந்தவர் என்றும்; தொண்டின் சிறப்பே அனுமனின் புகழுக்கு காரணம் என்று, இரு அணியினரும் பேசினர். நிறைவாக, கம்பன் காவியத்தில் அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் தொண்டின் சிறப்பே என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
பட்டிமன்ற நடுவர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: அனுமனை போல் சிறப்பு பெற்றவர் இருக்க முடியாது. சிவன், விஷ்ணு இருவரின் அம்சம் பெற்றவர் அனுமன். மண்ணுலக மக்கள் உயர்வடைய வேண்டும் என்பதற்காக, சிரஞ்சீவியாக அனுமன் இங்கேயே இருக்க வேண்டுமென ராமர் விரும்பினார். அனுமன் ஒருவன் மட்டும், ராமரே வந்தாலும் கூட, வைகுண்டம் செல்ல விரும்பவில்லை. மண்ணுலகிலேயே இருக்கிறேன்; அடியாருக்கு அடியாராக இருக்கிறேன் என்று இருந்துவிட்டார். ராமநாமத்தை முழுமையாக கண்டு அனுபவித்தவர் அனுமன். மண்ணுலக அறத்தை காத்துக்கொண்டிருக்கிறார். ராமநாமம் ஒலிக்கும் இடமெல்லாம் சென்று அருள்பாலிக்கிறார். நல்லாட்சி மலர்ந்திட, நல்லோர் வாழ், சனாதன தர்மம் தழைத்திட, ராமநாமத்தை சொல்ல வேண்டும். அவ்வகையில், கம்பன் காவியத்தில், அனுமனின் புகழுக் பெரிதும் காரணம் பக்தி பரவசத்தை காட்டிலும், தொண்டின் சிறப்பே! இவ்வாறு அவர் பேசினார்.