பதிவு செய்த நாள்
29
மே
2024
03:05
பூந்தமல்லி; பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில், 70 ஆண்டுகளுக்குப் பின், தீர்த்தவாரி உற்சவம் விழா விமரிசையாக நடந்தது.
பூந்தமல்லியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி துவங்கியது. சிம்ம வாகனம், கருட சேவை, சூரிய, சந்திர பிரபை, யானை, குதிரை வாகனம் என, தினமும் ஒரு வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழா நடந்து வந்த நிலையில், தீர்த்தவாரி உற்சவம் மட்டும் 70 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில், வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து திருக்குளத்தில் எழுந்தருளி, தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்த்தவாரி உற்சவம் நடந்ததால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.