பதிவு செய்த நாள்
29
மே
2024
03:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், பிரபல உற்சவங்களான கடந்த 22ம் தேதி கருடசேவை உற்சவமும், 26ம் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது.
பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று காலை, ஆள்மேல் பல்லக்கில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். வீதியுலா முடிந்ததும், நுாற்றுகால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. பின் மண்டபத்தில் இருந்து, சின்ன பெருமாள் என, அழைக்கப்படும் ப்ரணதார்த்தி ஹர வரதர் அனந்தசரஸ் புஷ்கரணி என, அழைக்கப்படும் கோவில் தெப்பகுளத்தில் எழுந்தருளினார். பிற்பகல் 12:30 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இவ்விழாவை காண காலை 10:00 மணியில் இருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் குழுமியிருந்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக குளக்கரை மற்றும் குளத்திற்குள் 100க்கும் மேற்பட்ட போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்திற்குள் பொது மக்கள் இறங்காமல் தடுக்கும் வகையில், கயிறு கட்டப்பட்டிருந்தது. மேலும் குளத்திற்குள் மூன்று பைபர் படகுகள் பாதுகாப்புக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. தீர்த்தவாரி உற்சவம் முடிந்ததும், குளத்திற்குள் பாதுகாப்புக்காக கயிறு கட்டப்பட்டு இருந்த பகுதிக்குள் மட்டும் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதித்தனர். இதில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இன்று காலை, த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிபேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.