பதிவு செய்த நாள்
29
மே
2024
03:05
நகரி; ஆந்திர மாநிலம், புத்துார் அடுத்த நாராயணவனம் கிராமத்தில் பத்மாவதி தாயார் உடனுறை கல்யாண வெங்கடேச பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.
இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதில், அம்ச வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம் என தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நேற்று காலை தேரில் கல்யாண வெங்கடேச பெருமாள் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகளில் வலம் வந்த தேர், மாலை 6:00 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. இன்று காலை சக்கர ஸ்தானம் நடைபெற உள்ளது. ஒன்பது நாட்களாக நடந்து வரும் பிரம்மோற்சவம், இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவிலில், வார்ஷிக பிரம்மோற்சவ விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. தினமும் ஊஞ்சல் சேவை, யாளி, சேஷ, சந்திரபிரபை, பல்லக்கு, கருடசேவை, ஹனுமந்த, திருத்தேர், குதிரை வாகனங்களில் உற்சவர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். இறுதி நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்து, கொடி இறக்கம் செய்யப்பட்டது.