பதிவு செய்த நாள்
03
ஜூன்
2024
03:06
கண்ணுார் : மிருக பலி யாகம் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்சை நீடிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர் என, கேரள ராஜராஜேஸ்வர கோவில் தலைமை குருக்கள் குபேரன் நம்பூதிரி பாட் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக, கேரளாவின் தலிபரம்பாவில் உள்ள ராஜராஜேஸ்வர கோவிலில் விலங்குகளை பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டது என, அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். கர்நாடக அரசியலைச் சேர்ந்தவர்கள் இந்த யாகத்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த கேரள அரசு, அது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், மிருக பலி செய்தது தொடர்பான சர்ச்சை நீடிப்பதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளதாக ராஜராஜேஸ்வர கோவில் தந்திரியும், தலைமை குருக்களுமான குபேரன் நம்பூதிரி பாட் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: கோவிலில் மிருக பலி யாகம் நடந்ததாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறியதை அடுத்து, அவ்வாறு நடந்ததா என பக்தர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம், பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை முடிவுக்கு வராமல் நீடித்தால், கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கோவிலில் இது போன்ற யாகம் எதுவும் நடத்தப்படவில்லை என ராஜராஜேஸ்வர கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கேரள அரசும், கோவிலிலோ அல்லது சுற்றியுள்ள பகுதிகளிலோ இது போன்ற யாகம் எதுவும் நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், சத்ரு பைரவி யாகம், ராஜராஜேஸ்வர கோவிலில் நடக்கவில்லை; அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான் நடந்தது என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.