பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
10:06
புவனேஸ்வர்; நான்கு ஆண்டுகளுக்கு பின், ஒடிசா புரி ஜெகன்நாதர் கோவிலின் நான்கு நுழைவுவாயில்களும் பக்தர்கள் வசதிக்காக நேற்று திறக்கப்பட்டன. ஒடிசாவில் உள்ள பழமைவாய்ந்த புரி ஜெகன்நாதர் கோவிலில் நான்கு நுழைவுவாயில்கள் உள்ள நிலையில், கொரோனா பரவலின் போது, அவை அனைத்தும் அடைக்கப்பட்டன. தொற்று குறைந்து கோவில் திறக்கப்பட்ட பின், சிங்க நுழைவுவாயில் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நடவடிக்கை: சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக மோகன் சரண் மஜி நேற்று முன்தினம் பதவியேற்றார். இதையடுத்து நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில், புரி ஜெகன்நாதர் கோவிலின் நான்கு வாசல்களையும் திறக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள், பா.ஜ., – எம்.பி.,க்கள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, கோவிலின் நான்கு நுழைவு வாயில்களும் நேற்று காலை 6:30 மணிக்கு திறக்கப்பட்டன. பின்னர் பேசிய முதல்வர் மோகன் சரண் மஜி கூறுகையில், “பதவி ஏற்பு நிகழ்வு முடிந்ததும், கோவிலின் நான்கு வாசல்களையும் திறக்க அரசு முடிவு செய்தது. ‘‘அதன்படி, அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன. கோவிலில் நிலவும் சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. ‘‘பக்தர்களின் வருகையை சீர்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். கோவிலின் சிறந்த நிர்வாகம், பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்,” என்றார்.
குற்றச்சாட்டு: “கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்ட நுழைவுவாயில்கள், ஊரடங்கு முடிந்த பின்னும் ஏன் திறக்கப்படவில்லை என்பது குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது,” என அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். புரி ஜெகன்நாதர் கோவிலின் வாசல்கள் திறக்கப்பட்டதன் வாயிலாக, தன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை பா.ஜ., நிறைவேற்றியுள்ளது.