கழுகுமலை கோயில் கந்த சஷ்டி திருவிழா:வரும் 13ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2012 11:11
கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி துவங்குகிறது. வரும் 17ம் தேதி தாராசூரன் வதமும்,18ம் தேதி சூரசம்ஹாரமும் நடக்கிறது. தென்பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் உலகப்புகழ்பெற்றது. திருப்பரங்குன்றத்துக்கு அடுத்தபடியாக மலையை குடைந்து குடைவரை கோயிலாக அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு பெற்ற கோயில். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்தபிறகு முருகன் கோபம் தணிய கழுகுமலையில் வந்து அமர்ந்ததாக ஒரு வரலாறும் கூறப்படுகிறது. இதனால் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்கு நடக்கும் சூரசம்ஹார விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சூரசம்ஹாரத்திற்கு முதல்நாள் சூரபத்மனின் தம்பியான தாராசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி கழுகுமலையில் மட்டுமே நடக்கிறது. இப்படி புகழ்பெற்ற கழுகுசலமூர்த்தி கோயிலில் இந்தாண்டுக்கான சூரசம்ஹார விழா வரும் 13ம் தேதி துவங்குகிறது. அன்று இரவு சுவாமி வள்ளி தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை சுவாமி வள்ளி தெய்வானையுடன் பூஞ்சப்பரத்திலும், இரவு பூதவாகனத்திலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி மாலை அன்ன வாகனத்திலும், 16ம் தேதி இரவு வெள்ளியானை வாகனத்திலும் திருவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் திருவீதி உலா வந்து தாராகாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 18ம் தேதி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நடக்கிறது. அன்று காலை சுவாமி வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு சண்முகர் அர்ச்சனை வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி வீரவேல்ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்யபுறப்படுகிறார். மாலை 5.35 மணிக்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு கோயில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் அபிஷேகமும், ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து 19ம் தேதி சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி சுவாமி வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து தபசு மண்டபத்தில் எழுந்தருளி தபசுக்காட்சிநடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி இரவு தெய்வானை பல்லக்கில் திருவீதி உலா வந்து திருக்கல்யாணம் இரவு 6.30 மணிமுதல்,7.30 மணிக்குள் நடக்கிறது. வரும் 22ம் தேதி சுவாமி வள்ளி தெய்வானையுடன் பல்லக்கிலும் சோமஸ் கந்தர் சிறிய பல்லக்கிலும் வீதிவலம் வரும் நிகழ்ச்சிநடக்கிறது. 23ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் கந்த சஷ்டிவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை எட்டயபுரம் மன்னர் பரம்பரை அறங்காவலர் தங்கசுவாமி தலைமையில் கோயில் நிர்வாக அதிகாரி தமிழானந்தன் மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.