ஆத்தூர்: ஆத்தூரில் நடந்த ஐப்பசி தேரோட்ட நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கலந்து கொண்டனர். ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கடந்த 30ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐப்பசி திருநாளை முன்னிட்டு தினமும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவில் அம்மன் சப்பர பவனி திருவீதி உலாவும் நடந்தது. 10ம் திருநாளான நேற்று(8ம் தேதி) காலை 9 மணிக்கு நான்கு ரதவீதிகள் வழியாக திருத்தேராட்டம் நடந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களோடு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டனர். மாலையில் சப்பர வீதி உலாவும் நடந்தது. ஐப்பசி திருக்கல்யாண விழாவை முன்னிட்டு இன்று(9ம் தேதி) காலையில் அம்மன் புறப்பாடும், மதியம் சுவாமி புறப்பாடும், மாலை 5 மணிக்கு மேல் மாலை மாற்றுதலும், இரவு 10 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடக்கிறது. நாளை சனிக்கிழமை பட்டிணப்பிரவேசம் நடைபெறும். ஆத்தூர் சோமநாதசுவாமி கோயில் ஐப்பசி திருநாள் தேரோட்ட ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் சரவணபவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூக்கன்சாமி உட்பட பலர் செய்திருந்தனர். திருவிழா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்றனர்.